ரக்னா லங்காவிற்கு எதிரான உத்தரவு தள்ளுபடி

Avant Garde-இற்கு நட்ட ஈடு: ரக்னா லங்காவிற்கு சிங்கப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி

by Bella Dalima 24-05-2019 | 3:17 PM
Colombo (News 1st) Avant Garde Maritime Services நிறுவனத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்குமாறு ரக்னா லங்கா (Rakna Lanka) பாதுகாப்பு நிறுவனத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை ஆராய்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி 5 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈட்டை வழங்குமாறு ரக்னா லங்கா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை கடந்த 9 ஆம் திகதி சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. Avant Garde நிறுவனத்தால் காலி துறைமுகத்தை அண்மித்த கடல் பிராந்தியத்தில் எம்.பி. மஹநுவர என்ற பெயரில் கப்பலொன்றில் முன்னெடுக்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையை இலங்கை பொலிஸார் கைப்பற்றினர். குறித்த கப்பலின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ரக்னா லங்கா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காமையை அடிப்படையாகக் கொண்டு Avant Garde நிறுவனத்தால் நட்டயீடு கோரப்பட்டது. ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் முழுமையான அரச நிறுவனம் என்ற விடயம் சிங்கப்பூர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.