அனுர சேனாநாயக்கவிற்கு நீதிமன்றத்தின் உத்தரவு

வசீம் தாஜூதீன் கொலை வழக்கு: அனுர சேனாநாயக்கவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

by Staff Writer 24-05-2019 | 5:55 PM
Colombo (News 1st) ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, எதிர்வரும் ஜூன் மாதம் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை சம்பவத்தின் சாட்சியங்களை மூடிமறைத்த குற்றச்சாட்டில் அவருக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி நாரஹேன்பிட்ட - ஷாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் தனது வாகனத்திற்குள் எரிந்த நிலையில் காணப்பட்ட தாஜுதீனின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவொரு விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு என விசாரணை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இதுவொரு விபத்து அல்லவெனவும் கொலை எனவும் குறிப்பிட்டது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க சுமார் ஒரு வருட கால சிறைத்தண்டனை அனுபவித்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை தொடர்பில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அனுர சேனாநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்