பாராளுமன்ற ஊழியர் பயங்கரவாத விசாரணைப்பிரிவிடம்...

பாராளுமன்ற அலுவலக ஊழியரை பயங்கரவாத விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் ஆலோசனை

by Staff Writer 23-05-2019 | 7:05 AM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியரை மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கிணங்க, குறித்த சந்தேகநபரை உடனடியாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலக ஊழியரை சேவையிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினிரின் விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உள்ளக ஆரம்ப விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியர், நேற்று முன்தினம் மேலதிக விசாரணைகளுக்காக பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார். குறித்த ஊழியரால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இதன்போது சோதனையிடப்பட்டதுடன், அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலக ஊழியரை 3 மாதங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு, பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற அலுவலக ஊழியராக கடமையாற்றிய கண்டியை சேர்ந்த 45 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.