நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்

தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்

by Bella Dalima 23-05-2019 | 7:38 PM
பாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் தன்வசப்படுத்தியுள்ளது. 345 மக்களவை ஆசனங்களைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு இந்திய மக்கள் மீண்டும் அங்கீகாரமளித்துள்ளனர். இதற்கமைய, தனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். 543 மக்களவை தொகுதிகளில் வேலூரை தவிர்ந்த 542 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக வாக்களிப்பு நடைபெற்றது. உலகின் ஜனநாயகத் திருவிழாவென வர்ணிக்கப்படுகின்ற இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகின. தேர்தல் முடிவுகளில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மை ஆட்சியமைக்க தேவையானளவு ஆசனங்களை தன்வசப்படுத்தியது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பெற்றுக்கொண்ட ஆசனங்களுடன் ஒப்பிடுகையில், பாரதிய ஜனதா கட்சி சிறிதளவு பின்னடைவை சந்தித்துள்ளது. எவ்வாறாயினும், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 92 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஏனைய கட்சிகள் 105 மக்களவை தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் மக்களின் அமோக ஆதரவோடு வெற்றியீட்டினார். வாரணாசியில் 5,45,056 பேர் நரேந்திர மோடிக்கு வாக்களித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் வெற்றிவாகை சூடினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தாம் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் மாத்திரமே வெற்றியீட்டினார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் இம்முறை ராகுல் காந்தி தோல்வியடைந்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி அமோக வெற்றியீட்டினார். கேரளா மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் அங்கீகாரம் கிடைத்திருந்தது. சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் வெற்றியீட்டினார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் தமிழகத்தில் தோல்வியை சந்தித்தனர். தமிழகம் மற்றும் புதுவையில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதியில் மாத்திரமே வெற்றியீட்ட முடிந்தது. இதற்கைமய, தமிழகத்தில் காலூன்றும் பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஸ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் படுதோல்வியடைந்த நிலையில், புதிய அமைச்சரவையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இருப்பு கேள்விக்குரியாகியுள்ளது. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களை தமிழக மக்கள் நிராகரித்துள்ளனர். மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நடிகர் ரஜினிகாந்த், தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தலுடன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் 13 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும் 9 தொகுதிகளில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றியீட்டியுள்ளன. ஏனைய கட்சிகளால் ஆசனங்களைக் கைப்பற்ற முடியாமற்போனது. சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றியீட்டியுள்ளது. இதற்கமைய, தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாகவும் ஆட்சியமைக்கும் நவீன் பட்நாயக் நீண்டகாலம் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.