கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணைக்கான திகதி அறிவிப்பு

by Staff Writer 23-05-2019 | 1:16 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முதலாவது விசேட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (23ஆம் திகதி) தீர்மானித்துள்ளது. மெதமுல்லன பகுதியிலுள்ள டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக, 3 கோடியே 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கின் 2ஆம், 3ஆம், 10ஆம் மற்றும் 16ஆம் சாட்சியாளர்களை அன்றைய தினத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுப்பதற்கும் நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. வழக்கின் முதலாவது பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஸ மருத்துவ பரிசோதனைக்காக நாளை (24ஆம் திகதி) முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி வரை சிங்கப்பூர் செல்வதற்கு நீதிபதிகள் குழாம் அனுமதி வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை குறித்த காலத்திற்கு மாத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ள விடயத்தை குடியகல்வு குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொலைநகல் ஊடாகவோ, தொலைபேசி ஊடாகவோ அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விசேட மேல் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.