தாக்குதல்தாரியின் சகோதரர்கள் நீதிமன்றில் ஆஜர்

கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவரின் சகோதரர்கள் நீதிமன்றில் ஆஜர்

by Staff Writer 23-05-2019 | 7:00 PM
Colombo (News 1st) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத்தின் இரண்டு சகோதரர்களும் சகோதரியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். குறித்த மூன்று பேரும் தற்கொலை தாக்குதலின் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு, பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவிற்கு அமைய, தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மன்றுக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய, சந்தேகநபர்கள் தொடர்பான கண்காணிப்பின் நிமித்தம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத்தின் சகோதரர்களான அஹமட் முஸ்கீன் அலாவுதீன், அஹமட் முஸ்னாத் அலாவுதீன் மற்றும் சகோதரியான பாத்திமா சுமையா அலாவுதீன் ஆகியோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மறுதினம் இவர்கள் மூன்று பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.