இந்திய தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று

இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று

by Staff Writer 23-05-2019 | 8:18 AM
Colombo (News 1st) இந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று (23ஆம் திகதி) நடைபெறவுள்ளன. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்படவுள்ளன. 17ஆவது இந்திய மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பித்து, இம்மாதம் 19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக 542 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்றிருந்தது. தேர்தல் மோசடிகள், வன்முறைகள், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக சில மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு, பிறிதொரு தினத்தில் நடாத்தப்பட்டிருந்ததுடன், சிலவற்றில் மீள் வாக்குப்பதிவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியனவற்றிற்கு இடையே பிரதான போட்டி நிலவுகின்ற நிலையில், மேலும் 21 எதிர்க்கட்சிகளும் ஆட்சிக்காக போட்டியிட்டிருந்தன. இந்தியா முழுவதிலும் மொத்தமாக 543 மக்களவைத் தொகுதிகள் காணப்படுகின்ற நிலையில், ஆட்சியைப் பொறுப்பேற்க 271 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியுள்ளது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையை சீர்குலைப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், சட்டம் ஒழுங்கை சீராகப் பராமரிக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம், தேர்தலுக்குப் பின்னராக கருத்துக் கணிப்புக்களின் அடிப்படையில் பாரதீய ஜனதா கட்சி அருதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.