வௌிநாட்டு அகதிகளை வட மாகாணத்தில் தங்க வைப்பதற்கு எதிர்ப்பு 

by Staff Writer 22-05-2019 | 8:22 PM
Colombo (News 1st) இலங்கையில் தஞ்சமடைந்துள்ள வெளிநாட்டு அகதிகளை வட மாகாணத்தில் தங்கவைக்கும் திட்டத்திற்கு தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. நீர்கொழும்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகள் ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். நீர்கொழும்பில் தஞ்சமடைந்திருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து இன்னலை எதிர்நோக்கினர். இதனால் கடந்த மாதம் 23 ஆம் திகதி பாதுகாப்புக் கோரி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இவர்கள் தஞ்சமடைந்தனர். இவர்களில் சுமார் 550 பேர் பஸ்யால அஹமதியா முஸ்லிம் சமூக நலன்புரி நிலையத்திற்கு அனுப்பிவைக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. வவுனியாவில் அகதிகளைக் குடியேற்றும் திட்டத்திற்கு வெளியான எதிர்ப்புகளை அடுத்து இம்மாதம் 8 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அங்கு சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இதனையடுத்து, கடந்த 17ஆம் திகதி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் சிலர் வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல் பொறுப்பேற்று யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றார். எவ்வாறாயினும், வட மாகாண ஆளுநர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தல் காரணமாக அவர்களை மீண்டும் வவுனியாவிற்கு அனுப்ப நேரிட்டதாகவும் இந்த அறிவுறுத்தல்களை ஏற்க முடியாது எனவும் ரட்ணஜீவன் ஹூல் நேற்று (21) கூறியிருந்தார். அகதிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடவில்லை. இதன் காரணமாக இலங்கையில் அகதிகள் அல்லது புகலிடக்கோரிக்கையாளர்கள், சட்டரீதியான வதிவாளர்களாகக் கருதப்பட மாட்டார்கள். இதேவேளை, அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு செல்ல முற்பட்ட தேரர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நேற்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளை வவுனியா பூந்தோட்டம் முகாமில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நகர சபை மண்டபத்தில் நேற்று பிற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. கலந்துரையாடலைத் தொடர்ந்து வெளிநாட்டு அகதிகள் வவுனியாவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரை கையளிக்கும் நோக்கில், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்ற போதிலும், அங்கு அரசாங்க அதிபர் இல்லாத காரணத்தினால் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமாரிடம் மகஜரைக் கையளித்தனர். இதனைத் தொடர்ந்து வவுனியா - மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் மகஜரை கையளிக்கும் நோக்கில், வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு இவர்கள் சென்றனர். எனினும், வவுனியா - மன்னார் பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கிருக்காதமையினால், மற்றுமொரு அதிகாரியிடம் மகஜரை கையளித்தனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா பூந்தோட்டம் முகாமிற்கு சென்ற சந்தர்ப்பத்தில், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு முகாமிற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், வீதிக்கு குறுக்காக லொறியொன்றும் நிறுத்தப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.