ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பாராளுமன்றில் அமளி

by Staff Writer 22-05-2019 | 8:57 PM
Colombo (News 1st) இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக மற்றைய நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விசாரணை இடம்பெறுவதற்கு முன்னர், பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பது ஆளுங்கட்சியின் நிலைப்பாடாகும். எனினும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இது தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமளி துமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பிற்கு மத்தியில், தெரிவுக்குழு தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பாராளுமன்ற அமர்வு நாளை (23) வரை ஒத்திவைக்கப்பட்டது.