தேர்தலில் மோசடி: இந்தோனேசியாவில் வன்முறை, சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்

தேர்தலில் மோசடி: இந்தோனேசியாவில் வன்முறை, சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்

தேர்தலில் மோசடி: இந்தோனேசியாவில் வன்முறை, சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

22 May, 2019 | 4:58 pm

இந்தோனேசியாவில் அதிபர் ஜோகோ விடோடோவின் வெற்றிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வன்முறைகளைத் தூண்டிய குற்றச்சாட்டில் அங்கு 20-இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று (21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விடோடோவிற்கு 55.5 வீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, ஜெனரல் பிரபோவோ சுபியான்டோவிற்கு 44.5 வீத வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், இந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக பிரபோவோ குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் காரணமாக, அவர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடும் என்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடும் என்றும் தகவல் வெளியானது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டனர். தலைநகர் ஜகார்த்தாவில் மட்டும் 3000 பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஜோகோ விடோடோவின் வெற்றியை எதிர்த்து தலைநகர் ஜகார்த்தாவின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள் நடைபெற்றன. இதன்போது வன்முறைகள் ஏற்பட்டதால் பொலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இந்த வன்முறையின்போது 6 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனையடுத்து, வன்முறைகள் மேலும் பரவுவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களுக்கு அங்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வட்ஸப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்