by Staff Writer 22-05-2019 | 1:04 PM
Colombo (News 1st) ஈரான் மேற்கொள்ளவிருந்த தாக்குதல்கள், அமெரிக்காவின் எதிர்நடவடிக்கைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்காவின் பதில் பாதுகாப்புச் செயலாளர் பட்ரிக் ஷனாகன் (Patrick Shanahan) தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களில் ஈரானினால் அமெரிக்காவுக்கு இருந்த அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பட்ரிக் ஷனாகன், அது தொடர்பில் சட்டவல்லுநர்களுக்கு தௌிவுபடுத்தும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தௌிவுபடுத்தும் கூட்டம் மூடிய அறையில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறிப்பிட்டுச் சொல்லமுடியாத அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்துவதற்காக, வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் படையினரை நிலைநிறுத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் அதிகரித்திருந்தது.
இந்தநிலையில், அமெரிக்காவுடன் ஈரான் போர் புரிய வேண்டுமாயின், அதுவே அந்நாட்டின் உத்தியோகபூர்வ முடிவாக இருக்குமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, அமெரிக்காவின் தடைகளுக்கும் அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாதென ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரச தொலைக்காட்சியில் உரைநிகழ்த்தும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.