அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப்குழுவுக்கு அழைப்பு

'Batticaloa Campus' தொடர்பில் விடயங்களை முன்வைக்க 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைப்பு

by Staff Writer 21-05-2019 | 10:22 AM
Colombo (News 1st) 'Batticaloa Campus' கல்வி நிறுவனம் தொடர்பில் விடயங்களை முன்வைப்பதற்காக 4 அரச நிறுவனங்களின் தலைவர்கள், முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு எனப்படும் கோப் (COPE) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சந்திப்பு இன்று (21ஆம் திகதி) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, உயர்கல்வி அமைச்சு, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சு, இலங்கையின் முதலீட்டுச் சபை மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்கள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 'Batticaloa Campus' என அறியப்படும் நிறுவனம் பல்கலைக்கழகமா அல்லது தொழிற்பயிற்சி மத்திய நிலையமா அல்லது வேறு நிறுவனமா என்பது தொடர்பில் முதற்கட்ட விசாரணை இடம்பெற்று வருவதாக, கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, குறித்த நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கியது யார் மற்றும் எவ்வாறு என்பது தொடர்பிலும் அதன் உரிமையாளர் யார், அது அரச நிறுவனமா, தனியார் நிறுவனமா அல்லது கலப்புத் திட்டமா என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்