சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்திய மரதனோட்டம்

20ஆவது ஆண்டாக சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்திய மரதனோட்டம்

by Staff Writer 21-05-2019 | 2:17 PM
Colombo (News 1st) உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரை மையப்படுத்தி நடத்தப்படும் மரதனோட்டம் 20ஆவது ஆண்டாக இவ்வருடமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகில் நடத்தப்படும் பாரிய தூரம் கொண்ட மரதனோட்டங்களில் இந்த பந்தயமும் ஒன்றாகும். சர்வதேசத்தின் பல பாகங்களிலிருந்தும் ஒவ்வொரு வருடமும் 1000-க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் இந்த பந்தயத்தில் சம்பிரதாயபூர்வமாக பங்கேற்பது வழமையானதொரு விடயமாகும். வேறு எந்த மரதனோட்டத்திலும் இல்லாமல் வரலாற்றை சுமந்துவரும் பல நினைவுச் சின்னங்களை பந்தயத்தின் இடையிடையே காணும் வாய்ப்பு வீர, வீராங்கனைகளுக்கு கிடைப்பதே இந்த பந்தயத்தின் சிறப்பம்சம். அந்த வகையில், இவ்வருடம் 67 நாடுகளைச் சேர்ந்த 1,500 வீர, வீராங்கனைகள் இந்த பந்தயத்தில் பங்கேற்றனர். வெற்றிக்காக வீரர்கள் 5,164 படிகளைக் கடக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் டக்லஸ் வில்சன் முதல் வீரராக பந்தயத்தைக் கடந்து ஆடவர் பிரிவில் சாம்பியனானார். வெற்றிக்காக அவர் 3 மணித்தியாலங்கள் 25 நிமிடங்கள் மற்றும் 25 செக்கன்ட்களை எடுத்துக் கொண்டார். மகளிர் பிரிவில் சாம்பியனான அமெரிக்காவின் கலி கெவே, தனது வெற்றிக்காக 4 மணித்தியாலங்கள் 12 நிமிடங்கள் 27 செக்கன்ட்களை எடுத்துக்கொண்டிருந்தார். இந்த பந்தயமானது 1999 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.