முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிற்கு பிணை

by Staff Writer 21-05-2019 | 7:00 PM
Colombo (News 1st) பிரமுகர் கொலை சதி முயற்சி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தியபோது பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும், 25,000 ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல சந்தேகநபருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். சந்தேகநபர் வௌிநாடு செல்ல முடியாது என உத்தரவிட்ட நீதவான், வழக்கின் மனுதாரருக்கோ, சாட்சியாளர்களுக்கோ அச்சுறுத்தல் விடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாமையால், அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க முடியாது என அறிவித்த நீதவான், சந்தேகநபருக்கு பிணை வழங்கியுள்ளார். அதற்கமைய, இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்பட்டார். சுமார் 7 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.