தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு: பாராளுமன்ற அலுவலக ஊழியரிடம் விசாரணை

by Staff Writer 21-05-2019 | 6:47 PM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற அலுவலக ஊழியர், மேலதிக விசாரணைகளுக்காக பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர் அழைத்துச்செல்லப்பட்டதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ குறிப்பிட்டார். சந்தேகநபரான பாராளுமன்ற அலுவலக ஊழியரால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் இதன்போது சோதனையிடப்பட்டதுடன், அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்றதாக படைக்கள சேவிதர் கூறினார். கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவலக ஊழியரை மூன்று மாதங்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற அலுவலக ஊழியராக கடமையாற்றிய கண்டியை சேர்ந்த 45 வயதான முஸ்லிம் நபர் ஒருவரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.