அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக வழக்குத்தாக்கல்

தாக்குதலைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக வழக்குகள் தாக்கல்

by Staff Writer 21-05-2019 | 8:37 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதால், மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முடியாமற்போனதால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தையொருவரும் சுற்றுலா வர்த்தகர் ஒருவரும் தாக்கல் செய்திருந்த மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அளுவிகாரே, L.T.B. தெஹிதெனிய மற்றும் பிரீத்தி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தை தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கிரிஸ்மால் வர்ணசூரிய ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் ஆஜராகினர். பிரதிவாதியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, தமக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை எனவும் பத்திரிகைகளில் வௌியான செய்தியைக் கண்டு தமது தரப்பு சார்பில் ஆஜராவதாகவும் குறிப்பிட்டார். இந்த விடயங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு மீண்டும் அழைப்பாணைகளை அனுப்பி வைக்குமாறு மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணிக்கு அறிவித்தது. வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை, அமைச்சரவை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகளை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து கத்தோலிக்க சபையைச் சேர்ந்த அருட்தந்தையர் சிலர் இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். பிரதமர், முன்னாள் பொலிஸ் மா அதிபர், தற்போதைய பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் தற்போதைய பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.