கல்விப் பணிப்பாளர் நியமனம்: இடைக்கால தடை நீடிப்பு 

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக M.I.M.மன்சூர் தொடர்ந்தும் செயற்பட நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 21-05-2019 | 3:20 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக M.T.A.M. நிசாமை, மாகாண ஆளுநர் M. L. A. M. ஹில்புல்லா நியமித்தமைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது , ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீடித்து உத்தரவிட்டுள்ளார். மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய M.I.M. மன்சூர் என்பவருக்கு எவ்வித காரணங்களும் இன்றி, அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்தி ஆளுநர் ஹிஸ்புல்லா இடமாற்றம் வழங்கியதாகவும், புதிய கல்வி பணிப்பாளராக M.T.A.M. நிசாமை நியமித்ததாகவும் தெரிவித்து திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நியமனத்திற்கு எதிராக மாகாண ஆளுநரை முதலாவது பிரதிவாதியாகவும் கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் உள்ளிட்டவர்களை பிரதிவாதிகளாகவும் பெயரிட்டு M.I.M.மன்சூர் எழுத்தாணை பிறப்பிக்குமாறு மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்றம் உடனடியாக தலையீடு செய்து தனக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு , நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் தனது எழுத்தாணை மனுவில் அவர் கோரியிருந்தார். இதனையடுத்து, மாகாண ஆளுநரின் நியமனக் கடிதங்களுக்கு நீதிபதி மா. இளஞ்செழியன் ஏற்கனவே இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக M.I.M.மன்சூர் தொடர்ந்தும் செயற்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. குறித்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நியமனங்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை நீடித்தும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக M.I.M.மன்சூர் தொடர்ந்தும் செயற்படவும் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.