ஈஸ்டர் தாக்குதல்களில் உயிர்நீத்தவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி

by Staff Writer 21-05-2019 | 1:11 PM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர்நீத்தவர்களுக்கு இன்று (21ஆம் திகதி) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக விசேட பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வு பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று, யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் இணைந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேவேளை, சாவகச்சேரி நகரத்திலும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். பயங்கரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் ஆத்ம சந்தி வேண்டி வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் உயிரிழ்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு, திருகோணமலை தங்கநகர் மெதடிஸ்த் தேவாலயத்தில் இன்று நடைபெற்றது, கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் , மட்டக்களப்பு சியோன் தேவாலயம் , நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயம், ஷங்கிரிலா, கிங்ஸ்பெரி மற்றும் சினமன் கிரேன்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த மாதம் 21 ஆம் திகதி மிலேச்சத்தனமான தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 8 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 300 பேர் வரை உயிரிழந்ததோடு, 500 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்திப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் நியூஸ்பெஸ்ட் பிரார்த்திக்கின்றது.