இலங்கை - ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி

இலங்கை - ஸ்கொட்லாந்து இடையிலான இறுதிப் போட்டி இன்று

by Staff Writer 21-05-2019 | 9:54 AM
Colombo (News 1st) இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (21ஆம் திகதி) நடைபெறவுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக இந்தத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எடின்பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. தொடருக்கான முதல் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதோடு முடிவின்றி கைவிடப்பட்டது. எதிர்வரும் 30ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் ​வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னர் இலங்கை அணி விளையாடவுள்ள கடைசி ஒருநாள் போட்டியாக இது அமைந்துள்ளது. இலங்கை அணி கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளதோடு, 3 வருடங்களுக்கு முன்னர் கடைசியாக ஒருநாள் தொடரொன்றை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றியீட்டிய வேண்டிய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணியும் ஸ்கொட்லாந்தும் இதுவரையில் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே மோதியுள்ளதுடன், அந்த இரண்டு போட்டிகளிலுமே இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் இலங்கை அணி முதல்தடவையாக சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் ஸ்கொட்லாந்துடன் மோதியதோடு, அந்தப் போட்டியில் 183 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது. அதன்பின்னர் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றில் ஸ்கொட்லாந்தை எதிர்த்தாடிய இலங்கை அணி அந்தப்போட்டியில் 148 ஓட்டங்களால் வெற்றியீட்டியிருந்தது. இதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இன்றைய ​போட்டி நடைபெறும் எடின்பேர்க் மைதானத்தில் இலங்கை அணியும் ஸ்கொட்லாந்து அணியும் ஒருநாள் போட்டியொன்றில் 8 வருடங்களின் பின்னர் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.