மீண்டும் ஜனாதிபதியானார் ஜோகோ விடோடோ

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி

by Bella Dalima 21-05-2019 | 4:04 PM
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ (Joko Widodo) இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளார். இந்தோனேசிய வரலாற்றிலேயே அதிபர், துணை அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரே தினத்தில் கடந்த மாதம் 17 ஆம் திகதி நடைபெற்றது. சுமார் 19 கோடி வாக்காளர்கள் பங்குபெற்ற இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து, முன்னாள் இராணுவத் தளபதி பிரபோவோ சுபியான்டோ (Prabowo Subianto) போட்டியிட்டார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். இந்த வரிசையில், இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அந்நாடு மூன்றாவது இடத்தை வகித்து வருகிறது. வாரக்கணக்கில் நீடித்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், ஜோகோ விடோடா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜோகோ விடோடோவிற்கு 55.5 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியான்டோவுக்கு 44.5 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.