ஆஸ்திரியாவில் அமைச்சர்கள் இராஜினாமா

ஆஸ்திரிய வலதுசாரி சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா

by Staff Writer 21-05-2019 | 8:07 AM
Colombo (News 1st) ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஆஸ்திரிய அமைச்சரவையில், வலதுசாரி சுதந்திரக் கட்சியினர் 50 வீதமான அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பதுடன் அவர்களில் வௌிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பாதுகாப்பு, போக்குவரத்து, சமூக விவகார அமைச்சர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். காணொளி விவகாரம் தொடர்பில் சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் உப தலைவருமான Heinz Christian Strache கடந்த வார இறுதியில் கட்டாயத்தின் பேரில் பதவியை இராஜினாமா செய்திருந்தார். 2017 இல் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ரஷ்ய நிறுவனமொன்றுக்கு வழங்கும் அவருடைய திட்டம் காணொளியாக ஜேர்மன் ஊடகங்களில் வௌியானதைத் தொடர்ந்து அவர் இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. உள்விவகார அமைச்சர் ஹேர்பெர்ட் கிக்ளும் (Herbert Kickl) கட்டாயத்தின் பேரில் பதவி விலக்கப்பட்டால் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக நேரிடும் என சுதந்திர கட்சி நேற்று எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஆஸ்திரிய சான்சலர் செபஸ்தியன் குர்ஸ் (Sebastian Kurz), உள்விவகார அமைச்சரை பதவி நீக்குமாறு நேற்று அறிவித்துள்ளார். அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு கட்சியின் பொதுச் செயலாளரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், புதிய தேர்தல் இடம்பெறக்கூடும் என வலதுசாரி மக்கள் கட்சியின் தலைவரும் ஆஸ்திரிய சான்சலருமான செபஸ்தியன் குர்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.