மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று மீண்டும் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

21 May, 2019 | 6:55 am

Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சில பல்கலைக்கழகங்கள் இன்று (21ஆம் திகதி) மற்றும் நாளைய தினங்களில் (22ஆம் திகதி) மீள திறக்கப்படவுள்ளன.

அந்தவகையில், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று (21ஆம் திகதி) ஆரம்பிக்கப்படுவதுடன், மாணவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பல்கலைக்கழக அடையாள அட்டை அல்லது மாணவர் பதிவுப் புத்தகத்துடன் வருகை தருமாறு பதிவாளர் டீ.பி. கித்சிறி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மாணவர்களை கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தருமாறு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவம் மற்றும் பொருளியல் பீடம் மற்றும் சட்டபீடம் என்பன இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், கலை பீடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுக்கான கல்வி நடவடிகைக்ள நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த மாணவர்கள் இன்று விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மனிதவள மேம்பாட்டு பீடங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை மறுதினம் (22ஆம் திகதி) திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் கடந்த 13ஆம் திகதி திறக்கப்பட்டதுடன், பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்திய, சுகாதார, கால்நடை மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்கள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கலை, முகாமைத்துவம் மற்றும் அறிவியல் பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அத்துடன், பல் வைத்திய பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் பீடம், மருத்துவ பீடம் என்பவற்றின் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாயம் பீடத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கல்வி ஆண்டு மாணவர்களின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் அரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது

கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, கலை மற்றும் கலாசார பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் வர்த்தக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் இன்று காலை 9 மணியில் இருந்து 3 மணிவரை வருகை தரமுடியும் எனவும் வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை இன்று நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை 19 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.

கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 4,000 மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்