ஊழியர் சேமலாப நிதியம் மீண்டும் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து துறைசார் நிபுணர்கள்

by Staff Writer 19-05-2019 | 10:05 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியம் மீண்டும் கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் மேற்கொண்ட தலையீடு காரணமாகவே ஊழியர் செமலாப நிதியம் மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாக, தி ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இந்தத் தீர்மானத்திற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இங்கு பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையை மாற்றும் உபாயமாக அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது. ஊழியர் சேமலாப நிதியம் என்பது நாட்டில் வீழ்ச்சிடையும் பங்குச்சந்தையை வலுப்படுவதற்கானதல்ல. அது நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் பணத்தை நிதியமாக பாதுகாத்து அதனை ஆக்கபூர்வமான வகையில் முதலிட்டு அந்த முதலீட்டில் கிடைக்கும் வருமானத்தை அந்தத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முறைமையுடனேயே, இலங்கை மத்திய வங்கியின் கீழ் ஊழியர் சேமலான நிதியம் செயற்பட வேண்டும். அதற்குப் பதிலாக வீழ்ச்சிடையும் பங்குச் சந்தையில் முதலிடுவதன் ஊடாக, அபாயகரமான முதலீட்டிற்கு தொழிலாளர் வர்க்கத்தின் நிதி பயன்படுத்தப்படுவதே இடம்பெறுகின்றது. பங்குச் சந்தையை மேம்படுத்துவது, ஊழியர் சேமலாப நிதியத்திற்குரிய விடயமல்ல என, சிரேஷ்ட் வங்கியியலாளர் ருசிருபால தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தனியார் மற்றும் பகுதியளவிலான அரச நிறுவன ஊழியர்களின் பங்களிப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்தின் மொத்த சொத்து 2017 ஆம் ஆண்டு 20,66,299 மில்லியன் ரூபாவாக காணப்பட்டது. இந்த நிதி அரசாங்கத்திற்கு உரியதல்லவென்பதுடன் நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்கு சொந்தமானது என்பதை நினைவிற்கொள்வது அவசியமாகும். எனினும், கடந்த 10 ஆண்டுகளில் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு கடந்த மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களிடமிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் அழுத்தம் ஏற்பட்டமை தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலந்தாலோசிக்கப்பட்டது. முறிகள் ஆணைக்குழுவின் தகவல்களுக்கு அமைய முறிகள் மோசடி ஊடாக மாத்திரம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 8529 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்புகூற வேண்டியவரகளின் விபரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்டாலும் அவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடுகின்றமை கேள்விக்கு வித்திடுகின்றது. இதுமாத்திரமல்லாது தற்போதைய அரசாங்கத்தின் கீழும் ராஜபக்ஸ ஆட்சியிலும் பங்குச் சந்தையில் சடுதியான வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி, பங்குச் சந்தை மோசடி ஊடாகவும் ஊழியர் சேமலாப நிதியத்திலுள்ள மக்களின் பணம் சூறையாடப்பட்டது. இந்த பின்புலத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது ஏற்புடையதா என்ற கேள்வி எழுகின்றது.