இலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை - எதிர்க்கட்சித் தலைவர்

by Staff Writer 19-05-2019 | 9:12 PM
Colombo (News 1st) போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (19ஆம் திகதி) விசேட உரை நிகழ்த்தியுள்ளார். விஜேராமவிலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் இந்த விசேட உரையை ஆற்றியுள்ளார். இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது எந்தவொரு போர்க் குற்றமும் நடைபெறவில்லை என்பதை, யுத்த வெற்றியின் 10ஆவது வருட பூர்த்தியின்போது பகிரங்கமாகக் கூறுவதற்கு விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபடக்கூடிய வகையில் உலகின் ஆயுதப் பிரச்சினைகளுக்கு தாக்கம் செலுத்தும் வகையிலான சட்டம் உருவாக்கப்பட்டது. போர்ச் சட்டத்தை அவ்வாறே பேணிச்செல்வது அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள் என கூறவும் வேண்டும். மேற்குலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் போர்ச்சட்டங்களுக்கு அமைய, இலங்கையில் எந்தவொரு போர்க் குற்றமும் இடம்பெறவில்லை என்பதை நான் மீண்டும் கூறுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, யுத்த காலத்தில் இலங்கை எதிர்நோக்கிய வௌிநாட்டு அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் இதன்போது அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். யுத்தத்தை நிறுத்துமாறு சில நாடுகள் விடுத்த அச்சுறுத்தலுக்கு அமையவே, பயங்கரவாதத்தை வெற்றி கொண்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். அத்தோடு, அமெரிக்காவின் குடியரசுக் கட்சி பல உதவிகளை செய்திருந்தது. அமெரிக்கா உதவியதன் காரணமாகவே, 2006ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்த முடிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் வழங்கப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் காரணமாகவே, 2007இல் புலிகள் அமைப்பின் ஆயுதக் கப்பலை அவுஸ்திரேலியா, இந்தோனிஷியாவிற்கு அண்மித்த கடற்பரப்பில் எம்மால் அழிக்க முடிந்ததாக மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார். எனினும், இலங்கையில் யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்நாட்டில் அமைதி உருவாகுவதற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் இடமளிக்கவில்லை. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து கடந்த காலத்தை நினைவூட்டி, எவ்வகையிலேனும் அவர்கள் மோதலையே முன்னெடுத்ததாகவும் தம்மை செவிமடுக்காது யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரச்சினையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். சீனா எமக்கு உதவுகின்றது என்பதும் அவர்களுக்கு பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தமிழிலும் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.