இலங்கையின் சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்

by Staff Writer 19-05-2019 | 2:00 PM
Colombo (News 1st) இலங்கையிலுள்ள குவைத் தூதரகத்தின் இணையத்தளம் உள்ளிட்ட நாட்டின் 13க்கும் அதிகமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இலங்கையின் குவைத் தூதரகம், தலவாக்கலையிலுள்ள தேயிலை ஆராய்ச்சி நிலையம், மிஹிந்தலையிலுள்ள ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் 10 தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, .lk மற்றும் .com முகவரியுடைய சில இணையத்தளங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களில், பதிவாகியுள்ள தாக்குதல் தொடர்பிலான தரவுகளை பெறமுடியும் எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார். பெறப்படும் தரவுகளுக்கமைய விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சைபர் தாக்குதலுக்கு இலக்கான இணையத்தளங்களை வழமைக்கு கொண்டுவருவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு, தரவுகளை பாதுகாக்கும் TechCERT நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் நடவடிக்கை மத்திய நிலையம் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. இந்தநிலையில், தற்போது அநேக இணையத்தளங்கள் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக TechCERT நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலீப்ப லக்சிறி தெரிவித்துள்ளார். இலகுவில் தாக்கக்கூடிய, குறைவான சைபர் பாதுகாப்பு காணப்படும் பல இணையத்தளங்கள் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தளங்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு TechCERT நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.