பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் சிலர் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 18-05-2019 | 4:26 PM
Colombo (News 1st) நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஒரு பகுதியினர் நேற்று (17) வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் நிலையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் கடந்த 24 நாட்களாக தங்க வைக்கப்பட்டிருந்த 170-இற்கும் மேற்பட்ட அகதிகளில் 35 பேர் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 19 பேரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 16 பேரும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பில் தற்காலிகமாகத் தங்கியிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள் நிர்க்கதிக்குள்ளாகினர். ஐ.நா-வின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினூடாக தஞ்சம் கோரி இலங்கையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி தஞ்சம் புகுந்தனர். தற்போது அவர்களில் அதிக எண்ணிக்கையானோர் பள்ளிவாசல்களிலும் ஏனையோர் பொலிஸ் நிலையத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.