by Bella Dalima 17-05-2019 | 4:44 PM
சீனாவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த தொழிற்சாலை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் சாவோஹுவா சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றைப் புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்துள்ளன.
நேற்று (16) மாலை திடீரென இந்த கட்டடத்தின் பெரிய சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது, கட்டடத்தின் ஒரு பகுதி தரைமட்டமாகியுள்ளது.
அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இரவு முழுவதும் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இன்று காலை வரை 10 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.