உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கை மீறிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

by Staff Writer 17-05-2019 | 9:19 PM
Colombo (News 1st) தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை வேறொரு வங்கிக் கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பாக கணக்காய்வாளர் நிறுவனமொன்று தயாரித்த அறிக்கையின் விடயங்களை உள்ளடக்கி வார இறுதிப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டிருந்தது. இலங்கைக்கு வெளியில் நடைமுறைப்படுத்தப்படும் வங்கிக் கணக்கொன்றில் பணத்தை வைப்பிலிடுமாறு அறிவுறுத்தப்பட்ட மின்னஞ்சல் தகவல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவரின் உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த மின்னஞ்சல் தகவல் எவ்விடத்திலிருந்து அனுப்பப்பட்டதென உறுதி செய்யப்படவில்லை. குறித்த மின்னஞ்சல் கணக்கில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை காண முடியவில்லை என கணக்காய்வை மேற்கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. என்றாலும், அவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதற்கு முன்னர் சந்தேகம் வெளியிட்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை வேறொரு வங்கிக் கணக்கில் வைப்பிலிட எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பான தகவல்களை நியூஸ்ஃபெஸ்ட் வெளியிட்டு 8 மாதங்களுக்கு மேலாகின்றது. எனினும், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சந்தேகத்திற்கிடமான எந்தவொரு வங்கிக்கணக்கையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடத்திச்செல்லவில்லை என்று உறுதி செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வெளிநாட்டு வங்கிகள் இரண்டின் கணக்குகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பெயரில் உள்ளமை விசேட அம்சமாகும். மெக்ஸிகோ வங்கி ஒன்றில் அமெரிக்க டொலர்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட கணக்கொன்றும் பொதுவான கொடுக்கல் வாங்கலுக்காக ஒதுக்கப்பட்ட மற்றொரு கணக்கிலக்கமும் அந்த வங்கிக் கணக்குகளில் உள்ளடங்கியுள்ளது. ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு நேரடியாக பெற்றுக்கொள்ளப்பட வேண்டிய பணத்தை வெளிநாட்டு வங்கிக்கணக்கொன்றின் ஊடாக பெற்றுக்கொள்ள செயற்பட்டமை சந்தேகத்தை தோற்றுவிக்கும் விடயமாகும். இலங்கை அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய வரியை தவிர்ப்பதற்காக எழுத்து மூலமாக மின்னஞ்சல் தகவலின் மூலம் வேறொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்புமாறு ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற நிறுவனத்திற்கு அறிவிக்கின்றமை சட்டத்தை மீறும் செயற்பாடாகும். 2017 - 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திணைக்கள சட்டத்தின் 189 ஆவது சரத்தின் பிரகாரம், வரி செலுத்தாத குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை தொடர்பாக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய, வரி மோசடிக்கான பின்புலத்தை உருவாக்க பங்களிப்பு செய்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வங்கிக்கணக்கு தலைவர், தேசிய வருமான வரி திணைக்களத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை மீறவில்லையா? இதற்கு முன்னரும் இவ்வாறு பணத்தை வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் செயற்பாடுகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவில்லை என்று உறுதியளிக்க முடியுமா?