திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி எச்சங்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி எச்சங்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

17 May, 2019 | 4:09 pm

Colombo (News 1st) மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களை கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருக்கேதீஸ்வரம் மற்றும் சதொச மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றன.

நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை நீதவான் விசாரணைகளை ஒத்திவைத்தார்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பில், இலங்கையில் ஆய்வு செய்ய முடியாததன் காரணமாக அவற்றை அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள பீட்டா ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான அறிக்கைகள் அல்லது சமர்ப்பணங்களை ஜூலை மாதம் 5 ஆம் திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து 83 மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.

அவை பாதுகாப்பின் நிமித்தம், அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்கள் தொடர்பான ஆய்வு குறித்து கட்டளை பிறப்பிக்குமாறு அரச தரப்பு மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளால் ஏற்கனவே சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களை ஆய்வுக்கு அனுப்புமாறு இன்று மன்னார் நீதவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிந்து மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படவிருந்த எழுத்துமூல சமர்ப்பணம் இன்றும் மன்றுக்கு கையளிக்கப்படவில்லை.

ஏற்கனவே நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ள இணைந்த அறிக்கை இன்று மன்றுக்கு கிடைக்கப்பெறாமையால், பாதிக்கப்பட்டவர்களின் சமர்ப்பணமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

குறித்த அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எழுத்துமூலம் சமர்ப்பணத்தை வழங்குமாறு நீதவான் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மன்னார் நீதவான் அறிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்