762 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 762 கைதிகளுக்கு பொது மன்னிப்பு 

by Staff Writer 16-05-2019 | 4:57 PM
Colombo (News 1st) வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில், 762 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். கைதிகளை விடுதலை செய்வதற்கான நிகழ்வு வெலிக்கடை சிறைச்சாலை மைதானத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. 736 ஆண் கைதிகளும் 26 பெண் கைதிகளும் விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 117 கைதிகளும் பல்லேகல திறந்த சிறைச்சாலையிலுள்ள 62 கைதிகளும் மஹர சிறைச்சாலையிலுள்ள 55 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 50 கைதிகளும் பலன்சேன சிறை முகாமிலுள்ள 53 கைதிகளும் வெசாக் பூரணை தினத்தன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் குற்றங்கள் ஆகியவற்றுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளைத் தவிர்த்து ஏனைய சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் வரலாற்றில் அதிக கைதிகள் ஒரே தடவையில் விடுதலை செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென நீதி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.