by Staff Writer 16-05-2019 | 6:52 PM
Colombo (News 1st) தலைமன்னாரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த நைஜீரியப் பிரஜைகள் நால்வருக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நைஜீரிய பிரஜைகள் நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, சந்தேகநபர்களான நைஜீரிய பிரஜைகள் நான்கு பேருக்கும் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நைஜீரிய பிரஜைகள் சட்டவிரோதமாக இந்தியா செல்ல உதவி புரிந்த இலங்கை பிரஜைகள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன் காரணமாக, எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி படகு மூலம் நைஜீரிய பிரஜைகள் நான்கு பேரும் இந்தியா செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.