வெல்லம்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி முறைப்பாடு

செப்புத்தொழிற்சாலை ஊழியர்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாடு

by Staff Writer 16-05-2019 | 9:16 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி ஒருவருக்கு சொந்தமான செப்புத்தொழிற்சாலையில் கைது செய்யப்பட்ட 9 ஊழியர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீதி சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவிதான, நீதி சேவைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொலிஸாரின் எழுத்துமூல மற்றும் வாய்மூல கோரிக்கை நீதவானின் செயற்பாட்டு அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என வெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த செப்புத்தொழிற்சாலையில் பணியாற்றிய 9 பேரும் வெல்லம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார். இவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது 9 ​பேருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. சந்தேகநபர்கள் 2 முதல் 8 சிம் அட்டைகள் வரை பயன்படுத்தியுள்ளதாகவும் அவர்களுக்கு மாதாந்த சம்பளமாக தலா 30,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் செப்புத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நேரத்தை விட கூடுதலான நேரம் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க பகுதிகளில் சஞ்சரித்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்களுக்காக 30,000 ரூபாவிற்கும் மேற்பட்ட வாடகையில் வீடொன்றும் பெறப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிணை சட்டத்தின் கீழ் இந்த விடயங்களை முன்வைத்த பொலிஸார் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். சந்தேகநபர்கள் எந்த சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இதன்போது பொலிஸாரிடம் வினவினார். விசாரணை முடிவடையாத நிலையில், அடுத்த தவணையின்போது குறித்த சட்டம் தொடர்பில் அறிவிப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எவ்வாறாயினும், 9 சந்தேகநபர்களை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கு நீதவான் உத்தரவிட்டார்.