இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணம் வேறொரு நாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றம்

by Staff Writer 16-05-2019 | 9:29 PM
Colombo (News 1st) தொலைக்காட்சி உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை வேறொரு நாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் கணக்காய்வு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தகவல்களை உள்ளடக்கி வாராந்த பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்தை வேறொரு நாட்டு வங்கிக் கணக்கிற்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டமையானது சைபர் தாக்குதலின் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி என வாராந்த பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கையளித்த கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்காய்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த வாரமளவில் குறித்த கணக்கறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இத்தகைய அறிக்கைகள் மற்றும் தகவல்கள் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் முன்கூட்டிய பாதுகாப்பு நடைமுறை ஒன்றை பின்பற்றுவதற்கு முயற்சிக்கின்றனரா என்ற கேள்வியும் எழுகின்றது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் விசேட கணக்காய்வொன்று நடைபெறுகின்ற சந்தர்ப்பத்தில், அதற்கு இணையாக நடைபெறும் மற்றுமொரு கணக்காய்வின் மூலமாக ஏற்கனவே நடைபெற்றுள்ள தவறுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகமும் எழுகின்றது. குறித்த போலி வங்கிக்கணக்கு தொடர்பில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல், நிதிப் பிரிவு பிரதானியின் உத்தியோகப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்காக பயன்படுத்தப்பட்ட கணினி தொடர்பிலான தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளது. குறித்த கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையில் சைபர் தாக்குதல் தொடர்பான எந்தவொரு விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை.