வெனிசூலா மனித உரிமை மீறலை விசாரிக்க வலியுறுத்தல்

வெனிசூலாவில் மனித உரிமை மீறல்: விசாரணை நடத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

by Staff Writer 15-05-2019 | 1:29 PM
Colombo (News 1st) வெனிசூலாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என, சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ஆதரவுப் படைகளினால் வெனிசூலாவில் சட்டவிரோத மரணதண்டனை மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, ஒபேக் அங்கத்துவ நாடான வெனிசூலாவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. வெனிசூலாவில் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவன் கைடோ அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தன்னை அறிவிக்குமாறு தெரிவித்ததுடன் மதுரோவின் அரசாங்கம் இது தொடர்பில் தனது எதிர்ப்பை வௌிப்படுத்தியதுடன் மீண்டும் தேர்தலை நடத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அமெரிக்கா மற்றும் மேலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் 50க்கும் மேற்பட்ட நாடுகள் வெனிசூலாவில் ஜூவன் கைடோவின் தலைமைப் பதவியை ஆதரிக்கின்றன. எனினும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் மதுரோவை பதவியில் நீடிக்க வைக்க முன்னெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.