வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 78 பேருக்கு விளக்கமறியல்

by Bella Dalima 15-05-2019 | 7:29 PM
Colombo (News 1st) நேற்றும் (14) நேற்று முன்தினமும் (13) வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குருணாகல், குளியாப்பிட்டிய, நிக்கவரெட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். இதேவேளை, கண்டி - மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்பட்ட 5 பேர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய நீதவானும் மாவட்ட நீதிபதியுமான சானக்க கலன்சூரிய முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெனிக்ஹின்ன பகுதியில் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட போது சந்தேகநபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டனர். கண்டி - தம்பரெவ , கிரிமெட்டி மற்றும் பிலிவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 65 பேர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். மேலும், பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினரின் பொறுப்பில் 20 சந்தேகநபர்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரானின் மனைவியும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய, அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் பொறுப்பாளர் ஒருவர் இன்மையால் அவரின் மகளும் அவருடனேயே உள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.