ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னரான பொதுப் போக்குவரத்து

பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

by Staff Writer 15-05-2019 | 10:09 AM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தி பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் ரயில்வே திணைக்களத்துக்கு 16 மில்லியன் வருமானம் கிடைத்துவந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி தாக்குதல்களின் பின்னர் வருமானம் 8 மில்லியனாக குறைவடைந்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது 50 வீத வருமான வீழ்ச்சி என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இலங்கை போக்குவரத்து சபையின் வருமானத்தில் 25 முதல் 30 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக, சபையின் பொது முகாமையாளர் ரொஷான் சந்திரசிறி தெரிவித்துள்ளார். தனியார் பஸ்களின் நாளாந்த வருமானம் 75 முதல் 80 மில்லியனினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.