பேஸ்புக் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் 

நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பேஸ்புக்

by Bella Dalima 15-05-2019 | 4:22 PM
நியூசிலாந்து - கிறிஸ்ட்சேர்ச் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் நேரலை சேவைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிறிஸ்ட்சேர்ச் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த மார்ச் 1 ஆம் திகதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாதிகள் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக வெளியிட்டனர். இதனையடுத்து, இணையத்தில் இதுபோன்ற வன்முறை செயல்கள் தொடர்பான நேரலைகளைக் கட்டுப்படுத்துமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், பேஸ்புக் பக்கத்தில் ஒருமுறை விதிமீறலில் ஈடுபடுவோருக்கு நேரலை செய்ய தற்காலிகத் தடை விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், விதிமீறலின் தன்மைக்கு ஏற்றவாறு தடையின் காலம் நீடிக்கப்படலாம் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் விரைவில் எல்லா நாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பகிரப்படும் வன்முறை தொடர்பான காணொளிகளைத் தடை செய்வது குறித்து பாரிசில் உலகத் தலைவர்கள் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், பேஸ்புக் அதன் நேரலை விதிமீறல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.