by Staff Writer 15-05-2019 | 8:20 PM
Colombo (News 1st) தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகவுள்ள நிலையில், வௌ்ள அனர்த்தத்தின் போது உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு மக்களை தௌிவூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அனர்த்த முன்னாயத்த தேசிய திட்டம் இன்று ஆரம்பமானது.
மக்கள் சக்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான ஆசிய - பசுபிக் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், இலங்கை பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த தேசிய திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இந்த திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
புலத்சிங்கள - பரகொட ஶ்ரீ விசுத்தாராம விஹாரையில் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து பாலிந்தநுகர, வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கி இன்றைய நாள் முழுவதும் தௌிவூட்டல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.
திடீரென ஏற்படும் அனர்த்தத்தின் போது உயிர்களைக் காக்கும் வகையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில், இதன்போது
செயற்பாட்டு ரீதியில் மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர்.
கடந்த வருடம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாட்டில் வௌ்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் பல பகுதிகளில் அடுத்துவரும் வாரங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.