மஹசொன் படையணியின் பிரதானி அமித் ஜீவன் வீரசிங்கவிற்கு விளக்கமறியல்

by Staff Writer 15-05-2019 | 6:53 PM
Colombo (News 1st) பொய் தகவல்களை இணையத்தளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மஹசொன் படையணியின் பிரதானி அமித் ஜீவன் வீரசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் காணப்படும் நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், இணையத்தளங்களில் பதிவுகளை இட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவித்தல்களை சந்தேகநபர் பின்பற்றவில்லை என கொழும்பு தெற்கு பிராந்தியத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இலத்திரனியல் ஊடகமொன்றில் வௌியிட்ட கருத்தை மீண்டும் இணையத்தளத்தில் அமித் வீரசிங்க பதிவேற்றியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னர் சுமார் 7, 8 பேரை வீட்டிற்கு அழைத்து அமித் வீரசிங்க கலந்துரையாடியுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த கலந்துரையாடலுக்கு அமைவாகவா குளியாப்பிட்டிய, வாரியபொல, மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜகிரிய பகுதியில் வசிக்கும் பராக்கிரம பண்டார நிரிஎல்ல என்பவரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, அமித் வீரசிங்கவிற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாட்ஸப் மற்றும் Imo உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி அமித் வீரசிங்க பொய்யான தகவல்களை பரப்புவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு இனங்களிடையே முறுகலை ஏற்படுத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு , கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புதிய சிங்களே தேசிய அமைப்பைச் சேர்ந்த டேன் பிரசாத் கடும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 2.30 அளவில் மீதொட்டமுல்ல பகுதியிலுள்ள முஸ்லிம் நபர் ஒருவரின் வீட்டிற்குள் மேலும் இரண்டு நபர்களுடன் அத்துமீறி சென்று உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்த பிரச்சினையை நியாயாதிக்க சபையினூடாக தீர்த்துக்கொள்ள முடியும் என்பதால், எந்தவொரு பலத்த நிபந்தனையிலும் சந்தேகநபரை விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார். இதன்போது, அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவில்லை என பொலிஸாரும் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இவற்றை ஆராய்ந்த நீதவான் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்டுள்ளார். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது எனவும் சந்தேகநபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மதம் அல்லது இனங்களை தாழ்த்தவோ அல்லது தனிநபரை அச்சுறுத்தவோ கூடாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.