இரண்டாம் தவணைப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

இரண்டாம் தவணைப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

by Staff Writer 15-05-2019 | 11:12 AM
Colombo (News 1st) பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகளை எக்காரணம் கொண்டும் இரத்துச் செய்யப்போவதில்லை என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி காணப்பட்டாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் வழமைக்குத் திரும்பும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மாணவர்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பாடசாலைகளிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் அமுலில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களை நம்பாமல் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பெற்றோரிடம் கல்வியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பாடசாலைகள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்ததால், அந்த வாரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய முடியாமல் போயுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், இரண்டாம் தவணைப் பரீட்சையை நடத்த ​வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.