NTJ உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்குத் தடை: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

by Staff Writer 14-05-2019 | 9:20 AM
Colombo (News 1st) தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதன்கீழ் இலங்கைக்குள் அல்லது வௌிநாடுகளில் குறித்த அமைப்புக்களில் உறுப்பினராக இருத்தல், தலைமை தாங்குதல், உத்தியோகபூர்வ சீருடை அல்லது இலட்சினையை பயன்படுத்துதல், கொடிகளை காட்சிப்படுத்துதல் அல்லது அணிதல், அமைப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்குபற்றுதல், உறுப்புரிமையைப் பெறுதல் அல்லது தொடர்புடுதல், உறுப்பினர்களுக்கு ஆதரவளித்தல், பாதுகாப்பளித்தல், நிதியுதவி வழங்குதல், ஊக்குவித்தல் மற்றும் ஆலோசனை வழங்குதல், போக்குவரத்து உள்ளிட்ட உதவிகளை வழங்குதல் என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.