தாக்குதல்களைக் கண்டிப்பதாக த.தே.கூ அறிக்கை

முஸ்லிம் மக்கள் மீதான காடையர்களின் தாக்குதல்களைக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை

by Staff Writer 14-05-2019 | 7:05 PM
Colombo (News 1st) கடந்த இரண்டு தினங்களாக முஸ்லிம் மக்களின் வீடுகள், வியாபாரத்தளங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது காடையர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேரத்தில் இவ்வாறான வன்செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை கண்டனத்திற்குரிய விடயம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் தம்மைப் பாதுகாக்கத் தவறுகின்றது என மக்கள் நினைத்தால், அவர்கள் தம்மைத் தாமே பாதுகாக்கத் தலைப்படுவார்கள் எனவும் அவ்வாறான சூழ்நிலையை அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களைத் தாக்குகின்ற பயங்கரவாதமாக இருந்தாலும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொள்கின்ற பயங்கரவாதமாக இருந்தாலும் அதற்கு நாட்டில் இடமளிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.