சஜித்திற்கு உரிய இடம் எப்போது கிடைக்கப்போகின்றது

சஜித்திற்கு உரிய இடம் எப்போது கிடைக்கப்போகின்றது: வெலிகம நகர சபை தலைவர் ரணிலுக்கு கடிதம்

by Staff Writer 14-05-2019 | 9:46 PM
Colombo (News 1st) வெலிகம நகர சபையின் தலைவர் ரெஹான் டி.விஜேரத்ன ஜயவிக்ரம ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றாவது சந்ததியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்துள்ள ரெஹான் டி.விஜேரத்ன ஜயவிக்ரம, அநேகமான சந்தர்ப்பங்களில் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் பகிரங்கமாக கருத்து வௌியிட வேண்டாம் என தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகக் கூறியுள்ளார். சஜித் பிரேமதாஸவிற்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தால், கட்சியில் வழங்கப்பட்டுள்ள இடத்தை இழக்க நேரிடும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை அச்சுறுத்துவதற்காகவே இத்தகைய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாகவும் ரெஹான் டி.விஜேரத்ன ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். தாம் அரசியல் அடிமையல்லவென வலியுறுத்தியுள்ள அவர், தமக்கு எதிராக கட்சி மேற்கொள்ளும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு அடிபணியப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். கட்சி தொடர்ச்சியாக நெருக்கடியையும் பின்னடைவையும் சந்தித்து வருகின்ற நிலையில், சஜித்திற்கு உரிய இடம் எப்போது கிடைக்கப்போகின்றது என மக்கள் வினவுவதாகவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது கடிதம் கட்சியின் தற்போதைய தலைவருக்கு சவால் விடுக்கும் ஒன்றல்லவெனவும் அவரது காலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் ரெஹான் டி.விஜேரத்ன ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். கட்சிக்குள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்தாலும் அவர் மக்களால் நிராகரிக்கப்படுவார் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விரைவில் கட்சி சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றியீட்டுவார் என தாம் நம்புவதாகவும் ரெஹான் டி.விஜேரத்ன ஜயவிக்ரம ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.