அரசியல்வாதிகள் ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டும்

ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு உள்ளது: மகாநாயக்கர்கள் அறிக்கை

by Staff Writer 14-05-2019 | 9:50 PM
Colombo (News 1st) வன்முறைகளைத் தவிர்த்து அமைதியான முறையில் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுமாறு 3 பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட பயங்கரவாத, அடிப்படைவாத, மிலேச்சத்தனமான தாக்குதல்கள் காரணமாக இன, மத பேதம் தீவிரமடைந்துள்ளதாக மகாநாயக்கத் தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து இன, மத ஒற்றுமையை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு உள்ளதாகவும் மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வாக்கு வாங்கியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டதால் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிட்டுள்ளதாகவும் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இலங்கை பௌத்த நாடு அல்லவென கூறியுள்ளமை எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்கு நிகரானது என மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் நல்லாட்சி மற்றும் சுபீட்சத்தை நிலைநிறுத்துவதற்காக மகா சங்கத்தினர் வழங்கும் ஆலோசனைகள் கவனத்திற்கொள்ளப்படாமை தொடர்பில் கவலையடைவதாகத் தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள், மீண்டும் மீண்டும் அந்த விடயங்களை நினைவுபடுத்த நேரிட்டமை கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பத்தில் சட்டத்தையும் அமைதியையும் பாதுகாப்பதற்கான கடமையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தரப்பினருக்கு அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.