மினுவாங்கொட மற்றும் ஏனைய பகுதிகளில் அமைதியின்மையைத் தோற்றுவித்த 74 பேர் கைது

மினுவாங்கொட மற்றும் ஏனைய பகுதிகளில் அமைதியின்மையைத் தோற்றுவித்த 74 பேர் கைது

மினுவாங்கொட மற்றும் ஏனைய பகுதிகளில் அமைதியின்மையைத் தோற்றுவித்த 74 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 May, 2019 | 8:18 pm

Colombo (News 1st) வட மேல் மாகாணத்தின் சில இடங்களில் நேற்றும் (13) நேற்று முன்தினமும் (12) ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நேற்று பிற்பகலில் இருந்து இன்று பிற்பகல் 4 மணி வரை பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து 6 மணி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டது.

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மூடப்பட்டிருந்ததுடன், வடமேல் மாகாண சபையின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

நாத்தாண்டிய – கொட்டாரமுல்ல பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின் போது 49 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இஹல கொட்டாரமுல்ல, மொரகலை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 54 வயதான ஒருவர் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நேற்று நாள் முழுவதும் வாறியபொல, ஹெட்டிபொல உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நிகவெரட்டிய நகரில் சிலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர்.

வாரியபொல – அனுக்கனே பகுதியில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்ட குழுவினர் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை CCTV-யில் பதிவாகியிருந்தது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு தரப்பினர் அந்தப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், சில இடங்களில் பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் நடத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், இன்றைய நாள் முழுவதும் குறித்த பகுதிகளில் அமைதி நிலவியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, மினுவாங்கொட நகரிலும் சிலர் அமைதியற்ற முறையில் செயற்பட்டதுடன், நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.

மினுவாங்கொட – பல்லபான பகுதியிலுள்ள நூடுல்ஸ் உற்பத்தி தொழிற்சாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட நகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

மினுவாங்கொட நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு சென்ற மினுவாங்கொட பிரதேச சபையின் தலைவர் நீல் ஜயசேகர மற்றும் பிரதி அமைச்சர் எட்வர்ட் குணசேகர ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அமைதியின்மையைக் கட்டுப்படுத்த முடியாமற்போனமை தொடர்பில் அவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.

மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இதுவரை 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 14 பேர் மினுவாங்கொடயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

இதேவேளை, ஹெட்டிபொல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரும் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 10 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்