கொச்சிக்கடை தாக்குதல்தாரியின் பெற்றோர், மனைவி நீதிமன்றில் சாட்சியம்

கொச்சிக்கடை தாக்குதல்தாரியின் பெற்றோர், மனைவி நீதிமன்றில் சாட்சியம்

கொச்சிக்கடை தாக்குதல்தாரியின் பெற்றோர், மனைவி நீதிமன்றில் சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

14 May, 2019 | 6:44 pm

Colombo (News 1st) கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய அலாஹூதீன் அஹமட் முவாத் என்பவர் சட்டக்கல்லூரிக்கான அனுமதியைப் பெற்றவர் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது

தற்கொலை குண்டுதாரியின் உயிரிழப்பு தொடர்பான ஆரம்பகட்ட நீதவான் விசாரணை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

தற்கொலை குண்டுதாரியான அலாஹூதீன் அஹமட் முவாத் உயிரிழந்த போது, அவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி எனவும் அவர் கடந்த 5 ஆம் திகதி பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாகவும் முவாத்தின் தாயார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட தனது குடும்பத்தில், முவாத் நான்காவது மகன் எனவும் கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் , 14 ஆம் திகதி மட்டக்குளியிலுள்ள வீட்டிற்கு அஹமட் முவாத் சென்றதாகவும் அவரின் தாயார் சாட்சியமளித்துள்ளார்.

இதன்போது, தன்னுடைய மூத்த சகோதரனுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியிருந்ததாகவும் நீதிமன்றுக்கு அவர் அறிவித்துள்ளார்.

தனது மகன் தொழிலின்றி இருந்தமையால், தனது கணவரால் மாதமொன்றுக்கு 30,000 ரூபா வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, 22 வயதான தனது மகனுக்கு இந்த வருடம் சட்டக்கல்லூரிக்கான அனுமதி கிடைத்திருந்ததாக அஹமட் முவாத்தின் தந்தை நீதிமன்றத்தில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

தாக்குதலின் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தன்னை பிரேத அறைக்கு அழைத்துச்சென்று தலை ஒன்றை காண்பித்ததாகவும், அது தனது கணவர் என அடையாளம் கண்டதாகவும் அஹமட் முவாத்தின் மனைவி கூறியுள்ளார்.

மரபணு சோதனைக்காக தங்களின் குருதி மாதிரிகளை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் பெற்றுக்கொண்டுள்ளதாக தற்கொலை குண்டுதாரியான அலாஹூதீன் அஹமட் முவாத்தின் பெற்றோர் கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் அறிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்