ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பெற அனுமதி

ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய நீதிமன்றம் அனுமதி

by Staff Writer 13-05-2019 | 3:00 PM
Colombo (News 1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெல்லம்பிட்டி செப்புத் தொழிற்சாலையின் ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லாவிடம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு, பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவின் முன்னிலையில் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (13ஆம் திகதி) இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன், குறித்த சந்தேகநபருக்கு தொடர்புள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட வேண்டியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து வெல்லம்பிட்டி பகுதியிலுள்ள செப்புத் தொழிற்சாலை ஒன்றின் 10 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் 9 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பத்தாவது சந்தேகநபரான கருப்பையா ராஜேந்திரன் அப்துல்லா என்பவர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரிடம் நாளையும் நாளை மறுதினமும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவுசெய்வதற்குத் தேவையான அனுமதியை வழங்குமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.