பொய்ப் பிரசாரங்கள் குறித்து விசாரிக்க விசேட பிரிவு

பொய்ப் பிரசாரங்கள் தொடர்பில் விசாரிக்க விசேட பிரிவு

by Staff Writer 13-05-2019 | 7:31 PM
Colombo (News 1st) இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்களைப் பதிவிடுவது தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைப் பிரிவு பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் பாதுகாப்புப் பிரிவினரால் வெடிக்கச் செய்யப்பட்ட குண்டு காணப்பட்ட வேனின் உரிமையாளர் தொடர்பில் தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய ஒருவரின் பெயரில் குறித்த வேன் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த நபர் தொடர்பில் 4 சந்தேகநபர்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சந்தேகநபர்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, வேனின் உரிமையாளர் தொடர்பான படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளது. 35 தொடக்கம் 40 வயதிற்கு இடைப்பட்ட தாடி வளர்த்துள்ள சுமார் ஐந்தரை அடி உயரமானவர் என கூறப்பட்டுள்ளது. 011 2 422 176 அல்லது 011 2 392 900 ஆகிய இலக்கங்களினூடாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிக்கு சந்தேகநபர்கள் தொடர்பில் அறிவிக்க முடியும்.