நாம் இலங்கையர். தீர்மானமிக்க தருணத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தலையாய கடமையே...

by Staff Writer 13-05-2019 | 9:16 PM
Colombo (News 1st) இலங்கைக்கு இது தீர்மானமிக்க தருணமாகும். நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டியது பொதுவான கடமையாக மாறியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொள்வதற்கு பல்வேறு கும்பல்களும் குழுக்களும் கடந்த 21ஆம் திகதி முதல் எத்தணித்து வருகின்றமை கண்கூடு. எந்தவொரு நிலைமையையும் பயன்படுத்தி அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வெட்கமற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளமை தௌிவாகின்றது. சிறியளவில் ஆரம்பமாகும் மோதல்கள் சற்றும் சிந்திக்காத அளவுக்கு வியாபிக்கும் அபாயம் முன்னொரு போதும் இல்லாதவாறு இன்று உணரப்படுகின்றது. இந்த நிலைமையின் கீழ் திட்டமிட்ட வகையில் செயற்படுகின்ற பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தவேண்டிய முப்படை மற்றும் பொலிஸாரின் பலத்தை, கலவரங்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்த நேரிட்டால் அது நாட்டிற்கு செய்யும் அநீதியாகும். சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கு ஒத்துழைக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். புத்திசாதுர்யமான இலங்கை மக்கள் அந்தப் பொறுப்பை ஏற்கனவே புரிந்துகொண்டுள்ளனர். இதற்குத் தடையேற்படுத்த முயற்சிக்கும் ஒருசில அரசியல்வாதிகளுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்காதிருக்க வேண்டியது எமது கடமை என்பதை வலியுறுத்திக் கூறவேண்டியுள்ளது. எமது நாட்டின் செயற்பாடுகளில் தலையீடு செய்யுமாறு வௌிநாட்டவர்களுக்கு செங்கம்பள வரவேற்பளிப்பதற்கு இன்று நாட்டின் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒருசிலர் தயாராவதைக் காணமுடிகின்றது. நாட்டிலுள்ளவர்களின் அனுசரணையுடன் வௌிநாட்டவர்கள் தலையிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளமையே கண்டி இராசதானியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்பதை இத் தருணத்தில் நினைவில்கொள்வது சாலச் சிறந்ததாகும். அந்த நிலையைப் புரிந்துகொண்டு ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்வதற்கு இடமளிக்காது செயற்படவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். இலங்கையர்களாகிய நாம் ஒரே இனத்தவர்களாவோம். நாம் ஒரே குடும்பம். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் அல்லது அத்தகைய நாடுகள் இலங்கையில் தலையீடு செய்வதற்கு இடமளிக்காது நாம் அனைவரும் கைகோர்ப்போம். எமது எதிர்பார்ப்பும் எமது எதிர்காலமும் இந்தத் தருணத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையிலே தங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துகொள்வோம். எமது நாடு என நாம் பெருமிதம் கொள்வதற்கு எமக்கு ஒரேயொரு நாடு மாத்திரமே உள்ளது. இலங்கை என்பதே எமது நாடு.