பதில் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு இடமளிக்கப் போவதில்லை - பதில் பொலிஸ்மா அதிபர்

by Staff Writer 13-05-2019 | 10:32 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தௌிவுபடுத்தும் விசேட அறிவிப்பினை பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். மதுபோதையில் சிலர் குளியாப்பிட்டி - ஹெட்டிபொல பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மீது நடத்திய தாக்குதல் நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்று பொலிஸ் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டதாக, பதில் பொலிஸ்மா அதிபர் C.D. விக்ரமரத்ன மேலும் கூறியுள்ளார். இதேவேளை, இன்றும் சிலர் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதை அடுத்து, நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது, பொலிஸார் பொறுமையுடனே செயற்பட்டதாகத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், அவர்கள் பொறுமையாக செயற்பட்டமையை வைத்து பொலிஸார் பலவீனமானவர்கள் என நினைப்பார்களாயின் அது அவர்களின் முட்டாள்தனம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பொலிஸாருக்கு சிறிய இந்தத் தீவிரவாதக் குழுவை ஒழிப்பது பெரியதொரு விடயமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து, இனம், மதம் பாராது பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறிய பதில் பொலிஸ்மா அதிபர், மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்களை இல்லாதொழிக்கும் தீவிரவாதிகளின் செயற்பாட்டை இல்லாது செய்ய வேண்டும் எனவும் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என உறவினர்களுக்கு அறியப்படுத்துமாறும் இல்லையெனில், சட்டத்தின் தன்மையைக் காண்பிக்க நேரிடும் எனவும் பயங்கரவாதிகளின் உறவினர்களுக்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளார். அந்தவகையில், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோ​ர் பிணை இல்லாது 10 வருட கால சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் எனக் கூறிய பதில் பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன, இதுபோன்றதான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை பொலிஸார் சார்பில் எச்சரிக்கை விடுப்பதாகக் கூறியுள்ளார்.